சென்னை: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் சுப்பையா சென்னை நங்கநல்லூர் அருகில் உள்ள வீட்டில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அரும்பாக்கம் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2 ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த வழக்கில், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்.19ஆம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன்கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளபட்டது. அதில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.
நிபந்தனை ஜாமீன்: அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாதபோது, சட்டப்பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்குப்பதிவு செய்ய என்ன காரணம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்?. மேலும், மருத்துவர் சுப்பையாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதி வழக்குத்தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு (மார்ச் 24) இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின்கீழ் கைது செய்யப்பட்ட ஏபிவிபி தலைவர் டாக்டர் சுப்பையாவிற்கு வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது, விசாரணை அலுவலர் முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஏபிவிபி முன்னாள் தேசியத் தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது