அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாளான இன்று(ஜனவரி 17) அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாளான இன்று(ஜனவரி 17) காலை 10 மணிக்கு, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனையடுத்து, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அதிமுக கொடியினை
ஏற்றி வைத்து, அங்கே இருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக, அண்மையில் கோகுல இந்திரா பேசியிருந்த நிலையில், இன்றைக்கு நடந்த எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாள் விழாவில் கோகுல இந்திரா சாதாரணமாக கலந்துகொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து இனிப்புகள் வழங்கினார். இது அதிமுக தொண்டர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளது.