முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு இன்று நூற்றாண்டு விழா. பாஜகவின் தொண்டனாக எம்ஜிஆரை நான் எப்படி பார்க்கிறேன் என்பதுதான் இந்த பதிவு.
எம்ஜிஆர் தன்னை திராவிட இயக்கத்தில் இணைத்துக்கொண்டு இருந்தாலும்கூட, திராவிட இயக்கங்களுக்கே உரித்தான நாத்திக அரசியலையும், இந்து விரோத மனப்பான்மையையும் நீர்த்துப்போகச் செய்தவர்.
அவர் நடித்த திரைப்படங்கள் மூலமாகவோ அல்லது ஒரு அரசியல் தலைவர் என்ற முறையிலோ எந்த இடத்திலும் - கடவுள் நிந்தனை செய்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனதை காயப்படுத்தியது இல்லை. அவர் உடல் நலம் குன்றி இருந்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாடுமே அவருக்காக பிரார்த்தனை செய்தது வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைத்திடாத மிகப்பெரும் சிறப்பு. திராவிட இயக்கங்களை பிரிவினைவாத சிந்தனையிலிருந்து மீட்டெடுத்தவர் எம்ஜிஆர். திராவிட நாடு கோரிக்கையை நங்கள் கைவிட்டோம் என்று அறிஞர் அண்ணா அறிவித்தார். தனி நாடு என்ற கோரிக்கை மட்டுமல்ல அந்த கருத்தையே கைவிட செய்தவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர், ஒருபோதும் தேசத்தையோ, தேசிய ஒருமைப்பாட்டையோ கேலி பேசியதும் இல்லை, கேள்வி கேட்டதும் இல்லை. மத்திய அரசுடனும், அண்டை மாநிலங்களுடனும் எத்தகைய அரசியல் நல்லுறுவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு எம்ஜிஆர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். அவர் ஒருபோதும் வெறுப்பு அரசியல் செய்தது இல்லை.
தன்னை மிகக்கடுமையாக விமர்சித்த கவிஞர் கண்ணதாசனையும், தன்னை தாக்கிய நடிகர் எம்.ஆர்.ராதாவையும், பிற்காலத்தில் அவர் எப்படி நடத்தினார் என்பதலிருந்தே அவருக்கு பழிவாங்கும் உணர்வு இல்லையென தெரிகிறது.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அதற்கு முன்னும், பின்னும் எவரும் இச்சாதனையை சாய்த்தது இல்லை. அதுமட்டுமின்றி அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகிய மூவரும் முதலமைச்சர் ஆவதற்கு எம்ஜிஆரே முதல் காரணமானவர். திரைப்படங்கள் மூலமாக தனக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கை அறிஞர் அண்ணாவின் அரசியல் வெற்றிக்கு பயன்படுத்தியவர் எம்ஜிஆர்.
அவருடைய அரசாங்க நிர்வாகம் பற்றி நிறைய விமர்சனங்கள் நமக்கு இருந்தாலும்கூட, எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாதவர் என்று பெருமையை நாம் அவருக்கு தந்தாக வேண்டும். பசி என்றால் என்னவென்று எம்ஜிஆர் நன்கு அறிந்ததால், பின்னாளில் அது சத்துணவு திட்டமாக வளர்ந்தது.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுகிற அதற்காக பணியாற்றுகின்ற யாராக இருந்தாலும், அவர்கள் காலடி மண்ணை திருநீராக நினைப்பவன் பாஜக தொண்டன். அந்த வகையில் எம்ஜிஆரும்கூட காலத்திற்கு முந்தைய ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரர்தான்” என பதிவிட்டுள்ளார்.