சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்பு மெட்ரோ ஏரிகள், இதர நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் நிரம்பிவழிந்தன. அதனைத் தொடர்ந்து மெட்ரோ ஏரிகளைக் கண்காணித்து வெள்ளப் பெருக்கைத் தவிர்க்க பொதுப்பணித் துறை அலுவலர்கள் உபரி நீரை வெளியேற்றிவந்தனர்.
குறிப்பாக பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதிநீர், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையினால் நீர்வரத்து தொடர்ந்து வந்ததை அடுத்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் உபரி நீரை கொசஸ்தலையாறு வழியாகத் திறந்துவிட்டனர். மேலும் செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இது குறித்துப் பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே நல்ல மழைப்பொழிவு இருந்தது. இதனால் ஏரிகள், குளங்கள் மழை நீரில் நிரம்பிவழிந்தன. மேலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்பு மழைப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால் உபரி நீரை வெளியேற்றினோம்.
சில மெட்ரோ ஏரிகளில் குறிப்பாக பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்குத் தொடர்ந்து நீர்வரத்து வந்துகொண்டே இருந்தது. கடந்த ஒரு வாரத்திற்குப் பின்பு உபரி நீரை வெளியேற்றுவதை நிறுத்தியுள்ளோம்" என்றார்.
மேலும் அவர், தொடர்ந்து அனைத்து ஏரிகளும் கண்காணிக்கப்பட்டுவருகின்றன எனவும் கூறினார். இதனிடையே சென்னைக்கு குடிநீர் வசதிக்காகப் பூண்டி ஏரியிலிருந்து 326 கன அடியும், செங்குன்றம் ஏரியிலிருந்து 285 அடியும் செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்படுகிறது.
இதையும் படிங்க: பொருள்கள் மட்டுமல்ல; நீதியும் இனி ஆன்லைனில்தான்!