சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான எளிதில் அணுகும் வகையில் கட்டப்படவில்லை.
2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி ரயில் நிலையங்கள் கட்டப்படவில்லை எனவும், மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் 2016ஆம் ஆண்டு சுற்றறிக்கையும் பின்பற்றவில்லை. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சென்னையை சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இன்னும் ஆறு வார காலத்தில் ஏற்படுத்தப்படும் எனவும் புதிதாக கட்டப்படும் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஆறு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதித்த தெருக்கள்.. சென்னையில் 6 தெருக்களில் எச்சரிக்கை..