சென்னை: மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புத் தலைவர் மேதா பட்கர், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், சுப. உதயகுமார் உள்ளிட்டோர் மு.க. ஸ்டாலினை இன்று (டிசம்பர் 13) தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மேதா பட்கர், "விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு முக்கிய முடிவுகளை சட்டப்பேரவையில் எடுத்தவர் மு.க. ஸ்டாலின். அனைத்து மாநிலங்களும் குறைந்தபட்ச ஆதார விலையை நடைமுறைப்படுத்த வேண்டும், அதேபோல் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்.
தீர்மானம் வேண்டும்
மேலும் உணவு, பால், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படை பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்தோம். விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை ஆகியவற்றை திருப்பித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம்.
அதேபோல், மத்திய தொகுப்பு தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு
அதுமட்டுமின்றி மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற உயிர்கள் வாழும் காடுகளைப் பாதுகாக்க 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் ஆதிவாசி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். மேலும், யானைகளின் நடமாடும் பகுதிகளை வலசை செல்லும் பகுதிகள் என அடையாளப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தோம்.
வேளாண் சட்டத்தை எதிர்த்ததுபோல, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதிசெய்ய வேண்டும். மக்களை நகரத்திற்கு வெளியில் குடியிருக்க வைப்பது, தீண்டாமை. இது குறித்த விரிவான அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல்செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: PM Modi in Varanasi: கங்கையில் நரேந்திர மோடி புனித நீராடல்!