சென்னை சேப்பாக்கத்தில் ஆடு, கோழி இறைச்சி விலை உயர்வு தொடர்பாக சில்லறை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜச்தக் பாஷா, ஆசிப் பாஷா ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சில மாதங்களில் மட்டுமே இறைச்சி விலை அதிகரிக்கும், ஆனால் தற்போது 150 ரூபாய் வரை இறைச்சிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் நாங்கள் ஏமாற்றுவதாக நினைத்து எங்களை கேள்வி கேட்கிறார்கள்.
ஆட்டிறைச்சி கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தங்கத்தின் விலையேற்றம் குறித்து தினமும் எழுதி வைக்கப்படுகிறது. ஆனால் ஆட்டிறைச்சி விலை அவ்வாறு எழுதப்படுவதில்லை.
விலை நிலையாக இல்லாமல் இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. முன்பெல்லாம் 40 ரூபாய் வரை விலை ஏறும், தற்போது 150 ரூபாயை தாண்டியுள்ளது. வெங்காய விலை ஏற்றத்தால் இறைச்சி விலையையும் உயர்த்தியுள்ளீர்களா என வாடிக்கையாளர்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள்.
கோழி இறைச்சி விலை கிலோ 250 ரூபாய் வரை வந்துவிட்டது. ஆட்டிறைச்சிக்கு மாற்றாக கோழி இறைச்சியை மக்கள் வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்டிறைச்சிக்கு மொத்த வியாபாரிகள் சரியான விலையை நிர்ணயித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். அவ்வாறு நடக்கும் வரை நாங்கள் வேலை செய்வதில் பலன் இல்லை என்பதால், இன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு கடைகளை அடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: