சென்னை விமான நிலையத்தில் இன்று, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே அதிமுக அரசு தயக்கம் காட்டிவருகிறது. எனவேதான், இவ்விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலையை ஆளுங்கட்சி உருவாக்கிவருகிறது. உச்ச நீதிமன்றமே அரசினை குட்டுவது போன்ற தீர்ப்பை அளித்துள்ளது. இதில் திமுக மீது குறைகூறுவதில் நியாயமில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு துளியும் இல்லை. அதற்காக இந்த அரசு போராடப் போவதுமில்லை. மத்திய அரசு, மாநில அரசுகளை ’முனிசிபாலிட்டி’ போல் நடத்துகிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது” என்றும் வைகோ குற்றஞ்சாட்டினார்.
மேலும் வைகோ பேசுகையில், ”தெலங்கானா பாலியல் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர் என்றவுடன் பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்கள் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தற்போதுள்ள நிலைமையில் காவல் துறை, நீதித் துறை மீது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, குற்றங்களுக்கு உடனடி விசாரணை, உடனடித் தீர்ப்பு, உடனடியாக அதனை செயல்படுத்துதல் போன்றவை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போலி என்கவுன்டர்களை தடுக்க முடியும்“ என்று கூறினார்.
இதையும் படிங்க: 'மெட்ராஸ் உயர் நீதிமன்றப் பெயரை மாற்றுங்கள்' - நாடாளுமன்றத்தில் முழங்கிய வைகோ