உழைப்பாளர்கள் தினமான இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் மூத்த தலைவர் எம்.ஆர்.ரகுநாதன் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “இந்தாண்டின் மே தினமானது 17 வது நாடாளுமன்ற தேர்தலோடு கொண்டாடப்படுகிறது. உழைப்பாளிகள், தொழிற்சங்கங்கள் கொண்டாடக்கூடிய இந்த மே தினம் தற்போது மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை தளர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு சில இடங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இது போன்ற தடைகள் எதுவும் ஏற்படவில்லை. இது அனைத்துக்கும் தேர்தல் அலுவலர்களே காரணம்.
மேலும் பேசிய அவர், ஆளும் கட்சியினரைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ க்களிடம் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. கடந்த ஒரு அண்டுகாலமாக அந்த மூன்று எம்.எல்.ஏக்களின் நடவடிக்கைகள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அப்போதெல்லாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுத்துள்ளது ஆளும் கட்சியின் தோல்வி பயத்தை காட்டுகிறது.
தங்களுக்கு அமைந்த கூட்டணி அதனால் ஏற்படவிருக்கும் தோல்வியை திசைதிருப்ப பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராம்தாஸ் பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகிறார். பொன்பரப்பி விவகாரத்தை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நான் குறிப்பிட்ட சமுகத்தை இழிவுப்படுத்தி வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக கூறி அறிக்கை வெளியிட்டு அதை துண்டு பிரசுரமாகவும் பரப்பி வருகிறார். அதுமட்டுமின்றி அவரது கட்சி தொண்டர்கள் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசி வருகின்றனர். எந்த கட்சி தொண்டர்களும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இதனை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.