லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் இப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அறிவித்திருந்தார். அதன்படியே இன்று மாஸ்டர் திரைப்படம் அமேசானின் வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளரின் இந்த முடிவு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 15 நாட்களுக்குள்ளேயே ஓடிடியில் வெளியானதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து இரண்டு நாட்களாக ஆலோசனை நடைபெற்று வந்தது. தற்போது இதில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இனிவரும் திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களுக்கு பின் தான் ஓடிடியில் வெளியிடவேண்டும். இதற்கு சம்மதிக்கும் தயாரிப்பாளர்களின் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்தை பொறுத்தவரையில் படத்தின் மூன்றாவது வார வசூல் முழுவதும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தயாரிப்பாளருக்கு பங்கு கிடையாது. மேலும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி 30 நாட்களில் ஓடிடியில் வெளியிட்டுக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாஸ்டர் விஜய் படமா? விஜய் சேதுபதி படமா?