சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இப்படம், உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதனிடையே, மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதியன்று அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள், பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் ஜனவரி 29 முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.
இது குறித்து பேசிய அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவரும், இயக்குநருமான விஜய் சுப்ரமணியம், அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர் எனவும் கூறினார்.
இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள், பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்களுக்கு மாஸ்டர் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்ட அவர், இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம் இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள சந்தாதாரர்கள் தங்களின் வீடுகளில் கண்டு களிக்கலாம் என்று கூறினார்.