நாடு முழுவதும் ஊரடங்கால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொழில் நிறுவனங்கள், தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிறுத்தி பல்வேறு சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். இந்த கோரிக்கையில் நியாயமிருக்கிறது. அதேபோன்று, ஒவ்வொரு தொழிலிலும் அங்கமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களும் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசு அறிவிக்கும் சலுகைகள் எதுவும் இந்த தொழிலாளர்களை சென்று சேரவில்லை.
இந்நிலையில், பல நிறுவனங்கள் கரோனா பாதிப்பை முன்னிறுத்தி தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பது, சம்பளமில்லா கட்டாய விடுப்பு அளிப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற கருணையற்ற, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இது ஏற்க முடியாத கண்டனத்துக்குரிய செயலாகும். நிறுவனங்கள் இதுபோன்ற அநீதியான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்“ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக அரசின் மக்கள் விரோதப்போக்கு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்!