லடாக் எல்லைப் பகுதி அருகே ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த 10 காவலர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று, சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில், காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் காவல் துறை தலைமை இயக்குநரும், சட்டம்- ஒழுங்கு டிஜிபியுமான ஜே.கே. திரிபாதி, காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தியா முழுவதும் கடந்த 1-9-2019லிருந்து 31-8-2020வரை 265 காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கும், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்த 29 காவலர்களுக்கும், வீரமரணம் அடைந்த 3 காவலர்களுக்கும் வீரவணக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி. எஸ்.பரமேஷ், ராணுவ தலைமையக அலுவலர் பி.என்.ராவ், பனீட் ஷதா, முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள், ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, சென்னையில் கரோனா தொற்றால் காலமான காவல் ஆய்வாளர் பாலமுரளியின் மனைவி கவிதா மற்றும் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது 144 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையடுத்து பேசிய டிஜிபி திரிபாதி, பொதுமக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தோரின் தியாகம் வீண் போகாது என்றும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் உயிர் பிரிவதை பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவலர் நினைவு தினம்: ஸ்டாலின் வீரவணக்கம்!