சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் மத்திய அரசுக்கு திமுக சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அண்ணா, கருணாநிதி கூறியதைப் போன்று மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றம் கூறியதைப் போல மக்களுக்கு அளித்த அடிப்படை உரிமைகளையும் (Fundamental Rights) அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்புகளையும் (Basic Structures) சிதைக்க திமுக ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தும் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வழங்கப்படவேண்டும் என்ற ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும் மத்திய அரசு நினைவு கொள்ளவேண்டும்.
"பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர்’’ என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற செயலை மத்திய அரசு அண்மையில் அரசியல் சட்டத்திருத்த வாயிலாக மேற்கொண்டுள்ளது. இதனை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளையே கலைத்துவிட்டு இந்தியாவை 200 ஜன்பத்கள் என்று பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை நோக்கிப் பயணிக்கும் பாஜகவுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது, பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் வெற்றிகளை அறிவிப்பது, மத்திய அரசு பெரிய அண்ணன் மனோபாவத்தில் நடந்துகொள்ளாமல் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்கவேண்டும் உள்ளிட்டவற்றையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம், திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம், திமுக அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பை 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம். வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தீர்மானம் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்திய திமுக, மக்கள் தொகை கணக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் அதிகரித்துவரும் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இதையும் படிங்க: வழக்கறிஞர்கள் தேவையற்ற போராட்டங்களில் ஈடுபடக் கூடாது - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி