சென்னை: நடிகர் விவேக், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி விவேக்கை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர் சந்திப்பின் போது, கரோனா தொற்று என இல்லாத ஒன்றை இருப்பதாக ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், யாரும் முகக் கவசம் அணிய தேவையில்லை எனவும், கரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு
அதன்பேரில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், தவறான கருத்துகளை பொதுமக்களிடையே பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியபோது, தடுப்பூசி குறித்து புரளி பரப்பவோ? பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியதோடு, பொதுமக்களுக்கான கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு, சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியிருந்தது.
வழக்கை ரத்து செய்ய கோரி மனு
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில், தமக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை. தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டாதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை விசாரத்த நீதிபதி எம்.நிர்மல்குமார், மன்சூர் அலிகான் மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.