சென்னை: பிராட்வே ஏழுகிணறு பகுதியில் ஒரு தம்பதி தனது 9 வயது சிறுமியுடன் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்களது மகளை ராயபுரத்திலுள்ள கணவரின் மாமா கணேசன் வீட்டில் விட்டுச் சென்றனர். பின்னர், ஐந்து மாதங்கள் கழித்து வந்த சிறுமியின் தாயார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், தற்போது சிறுமி, வீட்டில் தொலைக்காட்சியில் ஜோதிகா நடித்த பொன்மகள் படத்தில் வரும் காட்சிகளை பார்த்துள்ளார். அதில் தாயிடம் எதையும் மறைக்க கூடாது என வசனங்கள் வருவதை கண்ட அவர் தனது தாயிடம் சென்று உறவினர் கணேசன் தன்னை வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்துள்ளார்.
குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
இதனைக் கேட்டு அதிர்சியடைந்த தாயார், உடனடியாக இது குறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்சோ சட்டம் பதிவு செய்து விசாரணை ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஓராண்டாக சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி ராஜலட்சுமி குற்றவாளிக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்தும் உத்தரவுவிட்டார்.
இதையும் படிங்க: சிறுமி அடித்துக் கொலை: தாயும், அவரது காதலனும் கைது!