சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே இன்று(மே.15) காலை சாலையில் சென்ற ஒருவர் கீழே எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் தன்னை நோக்கி ஏன் எச்சில் துப்பினாய் எனக்கூறி அந்த நபரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் அந்த நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. பொதுமக்கள் காயம்பட்ட நபரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் தாக்குதலுக்குள்ளான நபர் நடத்துநர் என்பதும், தாக்கியவர் காவலர் லூயிஸ் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் சைதாப்பேட்டை உதவி ஆணையர் நடத்துநரை தாக்கிய சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் லூயிஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில் காவலர் லூயிஸ் தவறு செய்தது உறுதியானால் பணிநீக்கம் செய்யப்படுவார் என காவல் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆன பல் மருத்துவர்.. யார் இந்த மாணிக் சஹா!