சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(36). இவர் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று (ஆகஸ்ட் 20) வேலைக்கு சென்றுவிட்டு வழக்கம்போல் வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி உள்ளார். பின்னர் இன்று (ஆகஸ்ட் 21) காலை வேலைக்கு செல்வதற்காக வாகனத்தை எடுக்க வரும்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குரோம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 21) தாம்பரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேடையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தை வைத்து நின்று கொண்டிருந்துள்ளார். பின்னர் அவரை அழைத்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் விசாரணையில், காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த சரவணன்(27) என தெரியவந்தது. அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் குரோம்பேட்டை பகுதியில் திருடி வந்ததும் தெரியவந்தது. பின்னர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இரு சக்கர வாகனத்தையும் குற்றவாளியையும் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் மீது இரு சக்கர வாகனம் திருடியதாக வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.