சென்னை பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீவா நகர்ப்பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது. அத்தகவல் அடிப்படையில், காவல்துறையினர் ஜீவா நகர்ப்பகுதி முழுவதும் கண்காணித்தனர்.
இந்தநிலையில் ஜீவா நகர்ப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு நபரை சோதனை செய்தபோது போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச்சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) என்பதும், வெல்டிங் வேலை செய்து வருபவர் எனவும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ஆன்லைனில் India Mart App என்ற ஆப் மூலமாக போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. பின்னர் அவரிடமிருந்து 260 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!