சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்றிரவு (அக்.31) தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சற்று நேரத்தில் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக்கூறி செல்போன் தொடர்பைத் துண்டித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் முதலமச்சரின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அத்தகவல் புரளி எனத் தெரியவந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் வண்டலூர் மாம்பாக்கம் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பதும், இவர் பரோட்டா மாஸ்டராக இருந்து வருவதும் தெரியவந்தது. மேலும், நேற்றிரவு அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்தபோது தான் தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ரசிகர் என்றும், பாடகராக தான் இருந்து வருவதால் அவரது படத்தில் பாட வாய்ப்பு தரும்படி வேண்டுகோள் விடுத்ததும் தெரியவந்தது. இந்நிலையில், காவல் துறையினர் பழனிவேலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெடிகுண்டு மிரட்டல்: காவல் துறையை அலறவிட்ட மனநோயாளி