முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை முரசொலி அலுவலகத்தில் திறக்கப்பட்டதையடுத்து, கருணாநிதியின் நினைவிடத்தில் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ராயபேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அனைவருக்கும் வணக்கம், அன்பு சகோதரர்களே சகோதரிகளே, தலைவர்களே, உடன்பிறப்புகளே எனத் தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சரியாக ஒரு வருடம் முன்பு இந்த மண்ணின் தலைவர் கருணாநிதியின் முகத்தைப் பார்க்க இங்கே வந்தேன். இப்போது அவரது சிலையை திறப்பதில் பெருமையடைகிறேன். கழக உறுப்பினர்களுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துகள்.
கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு சூட்டப்பட்டுள்ள பெயரே புரட்சியின் பெயர். கருணாநிதி இல்லை என்றாலும், அவர் நம் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கருணாநிதியை வரலாறு என்றும் மறக்காது. கருணாநிதி வழியில் நின்று சர்வாதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்து போராடுவோம். கூட்டாட்சிக்காக குரல் கொடுத்தவர் கருணாநிதி. எந்த மாநிலத்தை பற்றிய முடிவுகளை எடுத்தாலும், அவர்களின் ஒத்துழைப்போடு எடுக்கப்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஒவ்வொரு மாநில மொழிக்கும், கலாசாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் எப்போதும் தைரியமானவர்கள்.இதுவரை எப்போதும் ஜெய்ஹிந்த், ஜெய் பெங்கால் என்றுதான் கூறுவேன். இந்த முறை ஜெய் தமிழ்நாடு எனக் கூறுகிறேன் என்று பேசி தனது உரையை நன்றி, வணக்கம் என தமிழில் முடித்தார்.