சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற மகத்தான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
45 வயதுக்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை மருத்துவ சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள ஆயிரத்து 172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
பயனடைந்தோர்
இந்தத் திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம, நகர்ப்புறப்பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுவரை (ஆக. 25),
- உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 93 ஆயிரத்து 100 நபர்களுக்கும்,
- நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 60 ஆயிரத்து 221 நபர்களுக்கும்,
- உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 41 ஆயிரத்து 290 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும், 6,488 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 6,708 நபர்களுக்கு இயன்முறை மருத்துவமும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 31 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தினால் மொத்தம் இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 838 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்'