சென்னை: ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் குடியரசு தினக்கொண்டாட்டத்தின் போது அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
அதில் வேலுநாச்சியார், வ.உ.சி, மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன் உள்ளிட்ட சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட முன்னணி தலைவர்களின் சிலைகளும், விடுதலைக்குப் பிறகும் நாட்டிற்கு அரும்பணி ஆற்றிய தலைவர்களின் பெருமையையும் பறைசாற்றும் வகையில் பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜ், ராஜாஜி உள்ளிட்டோரின் உருவச் சிலைகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், கொடிகாத்த குமரன், ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்கத் தேவர், அழகுமுத்துக்கோன் ஆகியோரது சிலைகள் வடிவமைக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
முதலாவது வாகனத்தில் மங்கள இசை அதற்கேற்ப பரத நாட்டியம், அடுத்த மூன்று வாகனங்களில் பல்வேறு தலைவர்களின் சிலைகளும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள் முன்னிலையில் இந்த அலங்கார வாகனங்களைத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இன்று முதல் பள்ளிகள் திறப்பு!