யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மலை ரயில் பாதையில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் இடிக்கப்பட்டு விட்டதாகவும், கட்டிட இடிபாடுகள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழ்நாடு முதன்மை தலைமை வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.
மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, கட்டிட இடிபாடுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அப்புறப்படுத்துவது தொடர்பாக வனத்துறையும், ரயில்வே துறையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து பேசி உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
பின்னர், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்ஸல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க வனத்துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, ஐந்து வழக்குகளை விசாரித்து இரு வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கேரள வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: காவேரி கூக்குரல் மூலம் இந்தாண்டு 2.5 கோடி மரங்கள் நட திட்டம்