ஜனவரி மாதம் சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான 400 கிலோ தங்கம் சிபிஐ வசமிருந்த போது 103 கிலோ காணாமல் போனதாக எழுந்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் கள்ளச்சாவி போட்டு லாக்கரை திறந்திருப்பது தெரியவந்தது அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாலியல் தொல்லை
கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு டிஜிபி அலுவலர், பெண் ஐ.பி.எஸ் அலுவலர் ஒருவருக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும், பெண் ஐ.பி.எஸ் அலுவலரை புகார் அளிக்கவிடாமல், சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி அலுவலர் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டிஜிபி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை
கடந்த மே மாதம், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜூடோ மாஸ்டர் கெபி ராஜ், தடகள பயிற்சியாளர் நாகராஜன் என தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக அமைச்சர்
திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன், கடந்த ஜூன் மாதம் சென்னை மத்திய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கோவிந்தராஜ் கொலை வழக்கு
கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்ற தொழிலாளி கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக எம்.பி ரமேஷ் உள்பட ஆறு பேரை சிபிசிஐடி கைது செய்தனர்.
கல்லூரி மாணவி கொலை
செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையம் அருகே காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவியான ஸ்வேதாவை இளைஞர் ராமசந்திரன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
என்கவுண்டர்
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரான துளசி தாஸ், ராம் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டி விட்டு ஒரு கும்பல் தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார்.
மேலும், துப்பாக்கியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த வடமாநில நபர்களை, டிரோன் பயன்படுத்தி காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது துப்பாக்கியால் சுட முயன்றதால் கொள்ளையன் ஒருவரை காவல் துறையினர் என்கவுண்டர் செய்தனர்.
பாலியல் தொல்லை - மாணவி தற்கொலை
கடந்த நவம்பர் மாதம் கோவையில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர், பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு சசிகலாவின் அண்ணன் மகன் ஜெயராமன், இளவரசி மகன் விவேக் ஆகியோரிடம் கோவை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கு
நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருச்சி நாவல்பட்டு பகுதியில், ஆடு திருடர்களை பிடிக்கச் சென்ற போது எஸ்.ஐ பூமிநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு திருடர்கள் தப்பியோடினர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிறார் உள்பட மூன்று ஆடு திருடர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை
டிசம்பர் 20ஆம் தேதி சென்னை மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
”உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பக்கூடாது, தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என கடிதத்தில் எழுதியிருந்தார்.
மாணவி தற்கொலை விவகாரத்தில் காதலித்து ஏமாற்றியதாக கல்லூரி மாணவர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராஜேந்திர பாலாஜி விவகாரம்
முன்னாள் அதிமுக அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட பிற துறைகளில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பப்ஜி மதன் கைது
யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பியதாக கடந்த ஜூன் மாதம் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சாட்டை துரைமுருகன் கைது
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக சாட்டை துரைமுருகனை திருச்சி காவல் துறையினர் கைது செய்தனர்.
அவதூறாக பேசிய மீரா மிதுன்
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பேசியதாக நடிகை மீரா மிதுன் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கிஷோர் கே சாமி
முதலமைச்சர் குறித்தும் பல்வேறு நபர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கிஷோர் கே சாமியை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாரிதாஸ் கைது
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து, தனியார் தொலைக்காட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமைச்சர்களின் வீடுகளில் சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக ஜூலை மாதம் முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
ஆகஸ்டு 10ஆம் தேதி அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், செப்டம்பர் 16ஆம் தேதி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும், அக்டோபர் 18ஆம் தேதி அதிமுக சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது.
டிசம்பர் 15ஆம் தேதி அதிமுக மின்சாரத்துறை அமைச்சரான தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இச்சோதனை நடவடிக்கையில் பல கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள், பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.