சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக துரைசாமி இருந்துவருகிறார். இவரது பதவிக்காலம் மே மாதம் 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனடிப்படையில் சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வுசெய்வதற்கான தேடுதல் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குச் சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் பொதுச்செயலாளர் நாகராஜன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், ” சென்னை் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுத் தலைவராக ஜேஎன்யூ பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை நியமனம் செய்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்திய அளவில் உயர்கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் கூறிக்கொள்கிறார்கள். அப்படியெனில், தேடுதல் குழுத் தலைவராகத் தமிழ்நாட்டில் கல்வியாளர்களே இல்லையா? இது வெளிமாநிலத்தவர் ஒருவரை இங்கு துணைவேந்தராக நியமனம்செய்வதற்கான ஏற்பாடாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
யார் இந்த ஜெகதீஷ் குமார்?
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு முதலே கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்தும், விடுதி கட்டண உயர்வைக் கண்டித்தும் மாணவர்கள் போராடிவருகின்றனர். அப்போது மாணவர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே கடும் மோதல் மூண்டது. இதில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்திலும் மாணவர்கள் மீது அடையாளம் தெரியாத சிலர் முகமூடி அணிந்துகொண்டு பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்து கடுமையாகத் தாக்கினர். இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த மாணவர்கள், ”ஜேஎன்யூவில் துணைவேந்தருக்குத் தெரியாமல் எதுவும் நடந்துவிடாது. துணைவேந்தர் ஒருசார்புடன் நடந்துகொள்கிறார்.
அரசியல் ரீதியாக மாணவர்களைப் பிரிக்கிறார். மேலும், இங்கு நடந்த தாக்குதல்களுக்கும் துணைவேந்தருக்கும் கண்டிப்பாகத் தொடர்பிருக்கிறது. எனவே, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கூறினர்.
இதனையடுத்து, ஜேஎன்யூ பல்கலைக்கழக துணைவேந்தர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென அனைத்துத் தரப்பு மாணவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இப்படி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களாலும், எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கடுமையாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு விமர்சிக்கப்பட்ட ஜெகதீஷ் குமார்தான் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுத் தலைவராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை... இறந்தவர் தந்தைதானா? மகளுக்கு சவால்