கரோனா வைரஸ் பொது முடக்கத்தால் கல்லூரிகளைத் திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, இறுதி பருவத்தேர்வுகளைத் தவிர, பிறப்பருவங்களில் அரியர் வைத்து கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் வழிகாட்டுதலின்படி, தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதையடுத்து, சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு கூடி, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவது குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அத்தீர்மானத்திற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி கூறியபோது, “இறுதி பருவத்தேர்வு தவிர பிற பருவத்தேர்வுகளில் அரியர் வைத்து, தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களின் அகமதிப்பெண் அடிப்படையில் குறைந்தப்பட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இளங்கலை மாணவர்களுக்கு 40, முதுகலை மாணவர்களுக்கு 50 என தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டு, தேர்வு கட்டணம் செலுத்தியிருந்த ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 518 பேரில் 99% மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதிப்பெண் பூஜ்ஜியமாக இருந்த மாணவர்களுக்கும், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படவில்லை. மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால், அரசு அறிவுறுத்தல்படி கல்லூரி திறந்ததும், அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும். கரோனா தொற்று காலத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: மெக்கானிக்கல், சிவில் - மாணவர்களிடம் குறைந்தது ஆர்வம்!