சென்னை: டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, கரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமபடி, மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.