பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு கொள்முதல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வெளிப்படையாக விசாரணை நடத்தினால் பருப்பு கொள்முதல் ஊழல் வெளிச்சத்துக்கு வரும் என்று நான் வெளியிட்ட அறிக்கை 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு, பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி என்மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பருப்பு கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டதற்கு எல்லாம் அவதூறு வழக்கு தொடர்வதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதோடு ராமதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.