சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வி.சுதாகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்தாண்டு எனது நண்பர் மோகன் தான் அடகு வைத்த நகைகளை மீட்க வேண்டும் என்று கூறி என்னிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கிக்கொண்டார். இந்த கடனை திரும்ப கேட்டபோது கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றினார்.
இதுதொடர்பாக, புது வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். அப்போது, காவல் ஆய்வாளர் பீர் பாட்ஷா மற்றும் சார்பு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்ய ரூ. 1 லட்சம் கேட்டனர். அதோடு முன்பணமாக ரூ.25 ஆயிரம் கேட்டனர். இதை நான் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் தெரிவித்தேன்.
அதன்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் லஞ்சம் கேட்டனர். இந்த லஞ்சம் பெற்ற வீடியோவை பதிவு செய்து, தமிழ்நாடு டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகாராக கொடுத்தேன். அவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழங்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் மீதான புகார் உண்மை என்று தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்றங்களில் இப்போது உண்மையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் பி.என்.பிரகாஷ்