சென்னை:கடந்த 1960ல் ராஜஸ்தானில் பிறந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக 2007ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 2019-ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுப் பின்னர், பொறுப்பு நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு 2021 நவம்பர் 22 பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். பின்னர், தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு இன்று 62 வயது நிறைவடைவதை அடுத்து, இன்று செப்டம்பர் 12 மாலையுடன் ஒய்வுபெறுகிறார். அவர் விசாரித்த வழக்குகளில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, கோயில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா? மதம் முக்கியமா? என கேள்வி எழுப்பியது, அரசு நிலங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக வைத்து அறிவுரை கூறியது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது ஆகிய வழக்குகள் மிக முக்கியமானவையாகும்.
மேலும் நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைக்க உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க கூடாது என உத்தரவிட்டது, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினி மனுவை தள்ளுபடி செய்தது உள்ளிட்டவை முக்கிய வழக்குகள்.
மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது, அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசின் உத்தரவை உறுதி செய்தது, மருத்துவ படிப்புகளை வழங்கும் தனியார் கல்வி நிலையங்கள் 50 சதவீத இடங்களை அரசு கட்டணத்தில் வசூலிக்க வேண்டுமென்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது, என்பன போன்றவை முக்கியமானவையாகும்.
இந்நிலையில் இன்று(செப்-12) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் பிரிவு உபச்சார விழாவில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் அவருக்கு பாராட்டு தெரிவிக்க உள்ளனர். தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெறுவதால் அவரை டெல்லியிலுள்ள கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (SAFEMA) தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி ஓய்வுக்கு பிறகு ஓரிரு நாட்களில் பதவியேற்க உள்ளார்.
இதனிடையே தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வுபெறுவதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை செப்டம்பர் 13 (செவ்வாய்கிழமை) முதல் பொறுப்பு நீதிபதியாக செயல்பட உள்ள நீதிபதி துரைசாமி, வரும் செப்டம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விரைவில் தேசிய கட்சி - தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர்