காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 40ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன உற்சவம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருந்ததால், குளத்தை தூர்வார முடியவில்லை. தற்போது அத்திவரதர் தரிசனம் நடைபெறும் நிலையில், குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும் அத்திவரதர் சிலையை குளத்திற்குள் மீண்டும் வைக்கும் முன்பாக குளத்தை தூர்வாராவிட்டால், 40 ஆண்டுகளுக்கு பிறகே குளத்தை தூர்வார முடியும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பி.டி. ஆதிகேசவலு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அத்திவரதர் சிலையை அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கும் முன்பாக அங்கிருந்த நீரை மீனுடன் சேர்த்து பொற்றாமரைக்குளத்திற்கு மாற்றிவிடப்பட்டு, குளத்திலிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, குளத்திற்கு செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை என்றும், குளத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, குளம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை 7ஆம் தேதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.