இந்திய சுதந்திரம் அடைந்து 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதிகோரி மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
அதன் மீது எந்த முடிவெடுக்கப்படாததால் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையைச்சேர்ந்த சுப்ரமணியன், கடலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல் துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இம்மனு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் எந்த பாதையில் செல்கிறார்கள் எனத் தகவல்கள் அளிக்கவில்லை என்றும்; சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காப்போம் என எந்த உறுதியையும், மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விதிகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊர்வலத்தை காவல் துறை ஒழுங்குபடுத்தலாம் என்றும், ஆனால் அனுமதி மறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிறன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல என்றும், நாங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத்தயார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக்கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்டு , அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போனால் வராது...ரூ.10க்கு மோடி ஜி வாட்டர் பாட்டில்: சேலத்தில் விற்பனை அமோகம்