சென்னை : நடிகர் விஷால் கடந்த 2016ஆம் ஆண்டு மருது திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாததால் தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்பு செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரியுள்ளார், அதன்படி லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2019ஆம் செப்டம்பர் 21இல் லைகா உடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் தன்னுடைய கடனை செலுத்தியதற்காக 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியான பின் 2020 மார்ச் மாதத்தில் ரூ.7 கோடியும், மீதித் தொகையை 2020 டிசம்பர் மாதத்துக்குள் செலுத்தி விடுவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கவில்லை எனவும், வட்டியுடன் மொத்தமாக 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிட கோரியும் லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது எனத் தெரிவித்து, லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : உச்சநீதிமன்றத்துக்கு மூன்று பெண் நீதிபதிகள் - கொலிஜியம் பரிந்துரை