சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 21ஆவது மெகா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்புரமணியன் பேசுகையில், "தமிழ்நாட்டில் இன்று(பிப்.05) 50ஆயிரம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரையில் மொத்தமாக 9 கோடியே 60 லட்சத்து 470 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதில் 90.48 % பேர் முதல் தவணையும், 69.33 % பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 26,61,866 பேர் 15-18 வயதுடையவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு புற்றுநோய் தொடர்பான சிகிச்சை அளிக்க அதிநவீன கருவிகள் கொள்முதல் செய்யப்படும், ஏற்கனவே 10 மாவட்டங்களில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
முதல் மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது கடினமாக உள்ளது 2030-க்குள் இலக்கு நிர்ணயித்து புற்றுநோய் பாதித்தவர்களை கண்டறிந்து உயிரிழப்புகள் தடுக்கப்படும். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
40 முதல் 45% சதவீதமாக இருந்த இறப்பு சதவீதம் 20 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. இது வரையும் 48,30,340 பேருக்கு மருத்துவம் பார்த்து மருத்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பு தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அவர், ”அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதை போல எதிர்காலத்தில் மக்கள் அதிமுகவை புறக்கணிப்பார்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி போராட்டம்- மு.க. ஸ்டாலின்!