சென்னை: பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் விமலா நகரில் வசித்து வருபவர் கெளதம். ரியல் எஸ்டேட் அதிபரான இவரது வீட்டில் உயர்ரக சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இன்று (ஆகஸ்ட் 01) அவரது வீட்டின் வெளியே நின்றிருந்த கார்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்ட கௌதம் அதிர்சியடைந்துள்ளார்.
பின்னர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
தீயில் கருகிய சொகுசு கார்கள்
இந்த விபத்தில் நான்கு உயர்ரக சொகுசு கார்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், கௌதம் வீட்டின் அருகே இருவர் வந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால், அவர்கள் காரில் தீயை கொளுத்தி விட்டுச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு