சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் கடந்த 21ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்த 4 சவரன் நகை திருடு போனதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஒரு ஆண் மற்றும் பெண் அந்த வீட்டில் இருந்து வெளியே வருவது போல் காட்சி பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக ஜெகதீஷ் மற்றும் ரேவதியிடம் காவலர்கள் விசாரித்தனர். அப்போது, சிசிடிவி காட்சிகளில் இருப்பது தங்களின் உறவினர் என்று ஜெகதீஷ் தெரிவித்து இருந்தார். அதனடிப்படையில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தவர்கள் கார்த்திக்- நித்யா என்பது தெரியவந்தது.
இவர்களை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று வெளியானது. கார்த்திக்கும்- நித்யாவும் குன்றத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இவ்வாறு திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அப்போது உறவினர்கள் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது காவலர்கள் வசம் வசமாக சிக்கிக் கொண்டனர்.
இந்த காதல் ஜோடியை கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆடம்பர வாழ்க்கை மோகம் - திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவி !