தனியார் தண்ணீர் லாரிகளை சிறைப்பிடிப்பது, வழக்குகள் பதிவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரிகள் மட்டுமின்றி ட்ராக்டர்கள் உள்ளிட்ட சிறு வாகனங்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
தனியார் தண்ணீர் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு அரசு உரிமம் வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கொடுக்காததால் தனியார் இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கும்போது தண்ணீரைத் திருடுவதாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையில், பருவமழை பெய்யத் தொடங்கிய பிறகே ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியது. இந்நிலையில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தங்களின் தண்ணீர்த் தேவைக்கு லாரிகளை மட்டுமே நம்பியிருந்த மக்கள் குறிப்பாக சென்னைப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், சென்னை மாநகரிலும் புறநகரிலும் உள்ள ஐ.டி.நிறுவனங்கள், தனியார் விடுதிகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் கேன் வாட்டர் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கூடும், அதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் அதிகரிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 புதிய லாரிகளுக்கு உரிமங்கள் வழங்கவும், 52 இடங்களில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அனுமதியும் விரைவில் அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.