தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். லாரி உரிமையாளரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தென்மண்டல லாரி உரிமையாளர் சங்கம் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த கணேஷ் குமாரின் லாரியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் நிறுத்தி சோதனை செய்துள்ளார். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் 300 ரூபாய் அபராதம் செலுத்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதன்பின், அபராதம் போடாமலிருக்க 200 ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இருப்பினும், 100 ரூபாய் அபராதம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாகக்கூறி லாரி உரிமையாளரான கணேஷ் குமாருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் அபராதம் விதிக்கமாட்டேன் எனக் கூறி லஞ்சமாக 200 ரூபாய் வாங்கியதோடு மட்டுமல்லாமல், அதன்பின் நூதன முறையில் அபராதம் விதித்து, நிலுவைத்தொகை இருப்பது போல் செய்துள்ளார். இதுதொடர்பாக உதவி ஆய்வாளரிடம் கணேஷ் குமார் நியாயம் கேட்கும் ஒலிப்பதிவும் உள்ளது.
இவ்வாறு லஞ்சம் வாங்கிக் கொண்டு தினமும் லாரி ஓட்டுநர்களிடம் 2 லட்சம் வரை போக்குவரத்து காவல்துறையினர் வசூல் செய்கின்றனர். மேலும், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் FC எனப்படும் தகுதிச் சான்று வாங்கும்போதும், லைசென்ஸ் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு அணுகும் போதும் அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாகக் கூறி சிக்கல் ஏற்படுகிறது.
இதனால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. ஆகையால், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என கூறப்பட்டுள்ளது.
புகாரைப் பெற்றுக்கொண்ட போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் அருண், போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதோடு, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் காவலர்களை புகைப்படம் அல்லது அலைபேசியில் வீடியோவாக எடுத்து ஆதாரங்களுடன் புகாரளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் தென்மண்டல லாரி உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கையூட்டு வாங்கிய மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கைது!