சென்னை:சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் குழுவினர் திங்கள் கிழமை (18.04.2022) இரவு கெல்லீஸ் சிக்னல் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, நள்ளிரவு அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர்.
சந்தேகத்தின் பேரில், ஆட்டோவை சோதனை செய்தபோது, ஆட்டோவில் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களை விசாரணைக்கு அழைத்தபோது, இருவரும் காவல் குழுவினரைத் தகாத வார்த்தைகளால் பேசி, காவலர்களைத் தாக்க முற்பட்டனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட காவல் குழுவினர் அவர்களிடமிருந்து கத்தியை பறித்து, இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் சென்னை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளது.
மேலும் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் குழுவினர் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சுரேஷ், விக்னேஷ் என்பது தெரிய வந்ததது. கத்தியால் காவலர்களைத் தாக்க முற்பட்டதும் தெரியவந்தது. தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
கஞ்சா கத்தில் பறிமுதல்:அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜொல்லு சுரேஷ் மீது 2 கொலை வழக்குகள், 2 கூட்டுக் கொள்ளை வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், விக்னேஷ் (எ) விக்னா மீது 2 கொள்ளை வழக்குகள் உட்பட 4 குற்ற வழக்குகளும் உள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று (19.04.2022) காலை இருவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் விக்னேஷ் (எ) விக்னாவுக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டதால், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விக்னேஷை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நாடி துடிப்பு குறைவாக உள்ளதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்தனர்.
விக்னேஷ் (எ) விக்னாவை உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, செல்லும் வழியிலேயே விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து உயரதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை செய்தனர். இச்சம்பவம் குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, பெருநகர குற்றவியல் நடுவர் இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் விசாரணை செய்து வருவதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஆளுநர் கார் மீது கற்கள் வீசப்பட்டதா? - தமிழ்நாடு காவல்துறை விளக்கம்