தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், 140 மாவட்ட கவுன்சிலர், ஆயிரத்து 381 ஒன்றிய கவுன்சிலர், இரண்டாயிரத்து 779 கிராம ஊராட்சித் தலைவர், 19 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று (அக். 12) காலை 8 மணிக்குத் தொடங்கி, இன்றும் நடைபெற்றுவருகிறது.
இன்று காலை 10 மணி
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்: மொத்தமுள்ள 153 இடங்களில் 55 இடங்களுக்கு வெற்றி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில், திமுக 49 இடங்களிலும், காங்கிரஸ் நான்கு இடங்களிலும், மற்றவை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. இதில், இரண்டு இடங்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றியைப் பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, திமுக 34 இடங்களிலும், அதிமுக 32 இடங்களிலும், மற்றவை 10 இடத்திலும் முன்னிலை வகித்துவருகின்றன.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்: மொத்தமுள்ள 1,421 இடங்களில் திமுக 675, அதிமுக 133, காங்கிரஸ் 30, பாஜக 7, சிபிஎம் 4, சிபிஐ 3, தேமுதிக 1, வேட்புமனு தாக்கல் இன்மை/ தேர்தல் நிறுத்திவைப்பு 1, போட்டியின்றித் தேர்வு ஐந்து என 948 இடங்களுக்கு வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, திமுக 316 இடங்களிலும், அதிமுக 60 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளன.
ஊராட்சித் தலைவர்: மொத்தமுள்ள 3007 இடங்களில் 2016 வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 137 இடங்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்து இடங்கள் வேட்புமனு தாக்கல் இன்மை/ தேர்தல் நிறுத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி வார்டு உறுப்பினர்: மொத்தமுள்ள 23 ஆயிரத்து 211 இடங்களில் 13 ஆயிரத்து 251 இடங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில், 3,221 இடங்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 26 இடங்களில் வேட்புமனு தாக்கல் இன்மை/ தேர்தல் நிறுத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.