மதுரையில் உள்ள சேது பொறியியல் கல்லூரி நடத்தி வருபவர் முகமது ஜலீல். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணா என்ற லையன் முத்துவேல், தன்னை பெரிய பைனான்சியர் என என்னிடம் அறிமுகமானார்.
கூட்டாளிகள், புரோக்கர்கள் மூலம் என்னுடைய கல்லூரியை விரிவுபடுத்துவதற்கும், மேம்பாட்டுக்காகவும் ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக கூறி நம்ப வைத்தார். அதற்கு 2 சதவீதம் கமிஷனாக ரூ.5.46 கோடி பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் கூறியபடி கடன் ஏற்பாடு செய்து தரவில்லை. வாங்கிய பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் லையன் முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஜான் விக்டர் தலைமையிலான காவல் குழுவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு தலைமறைவாக இருந்த லயன் முத்துவேல், அவரது கூட்டாளிகள் சங்கர், இசக்கியேல் ராஜன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் கைதான லயன் முத்துவேல் மீது ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவின் பகுதி அமைப்பாளராக இருந்தவர். சென்னையில் 100 கோடி வங்கி கடன் வாங்கி தருவதாக ராஜஸ்தானை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபரை ஏமாற்றி பணம் பறித்த முத்துவேல் கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கைதான 3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தொழிலதிபரின் வீட்டில் நகை, பணம் திருட்டு - குற்றவாளி கைது