நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 90 விழுக்காடு உறுதியாகி இருக்கிறது. மேலும் இக்கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி உள்ளிட்ட 1737 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையான சின்னதம்பி கரூரில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தம்பிதுரை வெற்றி பெற்று தற்போது எம்.பியாக இருக்கிறார். அடுத்த தேர்தலிலும் தம்பிதுரைக்கு சீட் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது அவர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தலைமையின் பேச்சைக் கேட்காமல் பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை கருத்து தெரிவித்து வந்ததால் கரூர் சீட் சின்னதம்பிக்கு உறுதியாகிவிட்டதாகவும், தம்பிதுரை இனி வரும் காலங்களில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவார் எனவும் அதிமுக வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "அதிமுக செயல் பற்றி பாஜக குறை சொல்லும் நேரத்தில் அதற்கு கண்டனம் பதிவு செய்யப்பட்டது. கூட்டணி குறித்து பதில் சொல்ல எனக்கு உரிமை இல்லை. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய குழு நியமிக்கப்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் அந்தக் குழு கூட்டணி பற்றி முடிவு செய்யும். தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம். நானும் விருப்ப மனு அளித்துள்ளேன். கரூர் தொகுதியில் எனக்குதான் சீட்டு கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. கரூரில் நான் மட்டும்தான் இருக்கிறேனா? கரூர் தொகுதியில் எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் நான் அதிமுக வெற்றிக்காக பாடுபடுவேன்" என்றார்.