சென்னை: மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நியூ பாம்பே ஸ்சுவீட் ஸ்டால் (New Bombay Sweet Stall) கடை உள்ளது. கடையின் உரிமையாளர் லோகேஷ் கான் (24) நேற்று முன்தினம் (மே.17) கடையை மூடும் நேரத்தில் இருவர் கடைக்கு வந்துள்ளனர். கடைக்கு வந்த இருவர் குளோப்ஜாம் எவ்வளவு என்று கேட்டதற்கு 100 ரூபாய் என உரிமையாளர் கூற, லோக்கல்ல இருக்குற எங்களுக்கே 100 ரூபாயா எனக் கேட்டு அடித்துள்ளனர்.
பின்னர் கடை உரிமையாளரை கடைக்குள் தள்ளி இருவரும் உள்ளே சென்று உரிமையாளரின் கண்ணத்தில் பலார் பலார் என மாறி மாறி அரைந்தனர். பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் லோகேஷ் கான் சிசிடிவி கேமரா காட்சியுடன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிவக்குமாரிடம் நேற்று (மே.18) புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த அடுத்த அரை மணி நேரத்தில் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் பேக்கரி உரிமையாளரை தாக்கிய ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், மடிப்பாக்கம் கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (28) என்பதும், இவர் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டம் (LLB) படித்து வருவதும் தெரியவந்துள்ளது.
பின்னர் பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரான மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிகளின் ஆபாசப் படத்தை ஷேர் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு