சென்னை: லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் ஊதியம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில், ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் இன்று (செப். 02) பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காத லதா
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், “கரோனா காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டினர்.
ஊதியம் குறித்து கேட்டால் தொடர்ந்து இழுதடிப்பதாக குற்றஞ்சாட்டிய பள்ளி ஊழியர்கள், தாங்கள் படும் சிரமத்தை கருத்திற்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரை செலுத்தாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடரும் பிரச்சினை
சில ஆண்டுகளுக்கு முன் வாடகை பாக்கி தராததால் ஆஸ்ரம் பள்ளிக்கு கட்டட உரிமையாளர் பூட்டு போட்டதும், பின்னர் நீதிமன்றம் தலையிட்டு பள்ளி திறக்க வைத்ததும் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநகராட்சி கட்டட பிரச்சினை
மோடி அரசின் பண மதிப்பிழப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருந்தார். ஆனால் அதே கருத்துக்கு எதிராக, ஜிஎஸ்டி காரணமாக தனக்கு வருமானம் குறைந்துள்ளதால், வாடகை செலுத்த முடியாது என சென்னை மாநகராட்சிக்கு எதிராக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தது நினைவுகூரத்தக்கது.