வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. மழையினால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நகர் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சென்னை சேத்துப்பட்டில் செயல்படும் சொமெட்டோ தனது வளாகத்தில் நூற்றுக்கணக்கான பேக்குகளைத் திறந்த வெளியில் போடப்பட்டிருந்ததை சுகாதாரத் துறை அலுவலர் பிரியதர்சினி தலைமையிலான குழு கண்டுபிடித்தது.
சொமெட்டோ நிறுவனத்தின் இந்தப் பொறுப்பற்ற செயலால் அங்கு மழைநீர் தேங்கி லட்சக்கணக்கான கொசுப்புழுக்கள் உற்பத்தியாகியிருந்தன. இதனால் அந்த நிறுவனத்தினரை எச்சரித்த சுகாதாரத் துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், இதுபோல் கொசுப்புழுக்கள் பரவும் வகையில் வைத்திருந்தால் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள், நிறுவனங்களின் இதுபோன்ற செயல்களால் அப்பாவி பொதுமக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு தங்களின் உயிர்களை இழக்கிறார்கள் என வேதனைப்பட்டனர்.
இதையும் படிங்க: 'விலை அதிகரிப்பால் பளபளப்பை இழக்கும் தங்கம்'