மனுஸ்மிருதி-இல் இந்து பெண்கள் கொச்சையாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பல இடங்களில் பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பாஜக சார்பாக திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த குஷ்பு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்திருந்தார்.
திருமாவளவனுக்கு எதிராக குஷ்பு தீவிரமாக களமிறங்கியுள்ள விவகாரத்தில் ஒரு உள்ளரசியல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த, 2005ஆம் ஆண்டு, தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு குஷ்பு கொடுத்த பேட்டியில், திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு பற்றி கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து கடும் விமர்சனத்திற்குள்ளானது. குஷ்புவின் இந்த கருத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து, அப்போது குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.
குஷ்புவின் கருத்து பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக விசிக மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தமிழ்நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்குகள் தொடரப்பட்டன. அவரது வீட்டின் முன் விசிகவினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். குஷ்பு மீதான 22 வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பின்புதான் அவர் நிம்மதியடைந்தார்.
இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கழித்து விட்ட நிலையில், திருமாவளவனுக்கு பதிலடி கொடுக்க குஷ்பு களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மனுஸ்மிருதியைத் தடைசெய்ய வழியுறுத்தி மாநிலம் முழுவதும் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், சனாதான சக்திகளால் என்னை வீழ்த்திவிட முடியாது. நான் யாருடனும் விவாதிக்க தயாராக உள்ளேன். என்னுடைய பேச்சின் ஒரு பகுதி மட்டும் தவறாக திரித்து பரப்பப்படுகிறது. சனாதானத்திற்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்றார்.
இதுகுறித்து ஈடிவி பாரதிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன், திருமாவளவனுக்கும், குஷ்புவுக்குமான கடந்த கால உரசலை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
தனது கருத்துக்களைச் சொல்ல குஷ்புவுக்கு தகுதியுண்டு. ஆனால், அதை தமிழர்களின் நம்பிக்கைகள் புண்படாமல், அவர்களை காயப்படுத்தாமல் செய்திருக்க முடியும் என்று, அப்போதைய பிரச்னை குறித்து கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில் திருமாவளவன் தெளிவுபடுத்தியிருந்தார்.
பாஜகவில் சேர்ந்த பின்னர், இழந்த தன் இமேஜை புதுப்பித்துக்கொள்ள குஷ்பு ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. காவி கட்சிக்கோ, இது அரசியல் மைலேஜ் பெறுவதற்கான முயற்சி.
தனது வலுவான கருத்துக்காக தமிழ்நாட்டில் நல்ல புகழ் பெற்றார் குஷ்பு. இப்போது பாஜகவுக்குள் நுழைந்த பின்னர் அவதூறு செய்யத் தொடங்கியுள்ளார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திருமாவின் கருத்துகளை யாரும் நியாயப்படுத்த முடியாது!'