சென்னை: முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, 11 ராணுவ உயர் அலுவலர்கள் குன்னூர் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பிபின் ராவத்தின் உருவப் படத்துக்கு கே.எஸ். அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, “பிபின் ராவத் மரணம் இந்தியாவைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது. அவர் இறந்தது இந்தியாவிற்கும், இந்திய பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். நாட்டின் தலைசிறந்த குடிமகனையும் அவரது குடும்பத்தையும் இழந்து வாடுகிறது. இந்தத் துக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.
சோனியா காந்தியின் பிறந்த நாளை இன்று (டிசம்பர் 9) அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவுசெய்திருந்தது. ஆனால் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த காரணத்தினால் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்துசெய்துள்ளோம். இந்த விபத்து ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயம், விசாரணையில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ராஜிவ் காந்தி கொலை
ராணுவத்தில் புலனாய்வுத் துறை இருக்கின்றது. அவர்கள் இதனை மிகுந்த கவனத்தோடு ஆராய்வார்கள் நமக்குச் சொல்லப்பட்ட செய்தி அந்த ஹெலிகாப்டர் மிகவும் நவீன வசதி உடையது. பனிமூட்டத்தின் காரணமாக அந்த விபத்து நடந்திருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது.
நவீன ஹெலிகாப்டர்களில் பனி ஒரு தடையாக இருந்ததால் அது எப்படி ஏற்பட்டது என்பதையும் புலனாய்வு செய்ய வேண்டும் நிச்சயமாக ராணுவமும், ராணுவப் புலனாய்வுத் துறையினரும் சரியாகச் செய்வார்கள். ராஜிவ் காந்தியின் கொலை என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை நீண்ட காலமாக விடுதலைப் புலிகளால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்று.
விபத்தில் சந்தேகம் இல்லை
ஆனால், தற்போது நடந்த இந்த விபத்தில் அதுபோன்ற சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை எந்தத் தரப்பிலிருந்து எந்தவித யூகமும் வரவில்லை. இதுவரை இது விபத்து என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ராணுவத்தின் புலனாய்வு மிகுந்த வலிமையான புலனாய்வு, அவர்கள் புலனாய்வு செய்து வெளியிடுவார்கள்.
ஜனநாயக நாட்டில் யூகம் செய்வதைத் தடைசெய்ய முடியாது பத்திரிகையாளராக எதை வேண்டுமானாலும் எழுதலாம். பிபின் ராவத்தின் உடல் இன்னும் அடக்கம் செய்யவில்லை. இதற்குமேல் இதை ஆராய தேவையில்லை. அனைத்தும் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
சர்வாதிகாரப் போக்குடன் நடக்கும் பாஜக
ஏழாண்டுகளாகவே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை. சட்டப்பேரவை இயங்குகிற நேரம் மிகக் குறைவு, ஆனால் நாடாளுமன்றம் இரவு 12 மணி நேரம் வரை இயங்குகின்ற பழக்கம் உள்ளது. நாடாளுமன்றத்தில் அனைத்தும் விவாதிக்க அனுமதி உண்டு. ஆனால், விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை அரசு திரும்பப் பெற்றது. அதற்கு உண்டான ஒரு விவாதம்கூட நடத்த தயங்குகின்றனர்.
இதை ஊடகங்களும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், பாரதிய ஜனதா அதைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள், எதிர்க்கட்சிகள் அமளி செய்கின்றார்கள் என்பதைச் சொல்லிவருகின்றார்கள். எதிர்க்கட்சிகளின் கடமையே ஒரு சட்டத்தைப் பற்றி விவாதம் செய்வதுதான் அவர்களை விவாதம் செய்வதற்காகத்தான் மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பாரதிய ஜனதா விவாதங்களை இல்லாமலும் விவாதங்கள் நடத்தாமலும் சட்டங்களை இயற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறார்கள். பாரதிய ஜனதாவிற்குப் பொறுப்புணர்ச்சி இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்கப்படுவதில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கின்றனர்.
ராணுவத்தில் அந்நிய முதலீடும் அந்நியர் தொழில்நுட்பமும் இல்லாமல் இருக்க முடியாது. உலகம் முழுவதும் இருக்கின்ற நாடுகளின் ராணுவத்தில் வெளிநாட்டு மூலதனம் வெளிநாட்டு முதலீட்டைப் பயன்படுத்துவார்கள். ராணுவத்தில் அந்நிய முதலீடும், அந்நியர் தொழில்நுட்பமும் இருந்தால்தான் நாட்டின் பாதுகாப்பு வளர்ச்சி அடையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்ட வீரர்களின் உடல்கள்