நான்கு மணி நேர வாய்ப்பு கூட வழங்காமல் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அறிவித்ததன் விளைவாக பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் தீர்ந்தபாடு இல்லை எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப, ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் ஏற்பாடு செய்ததை போல சிறப்பு ரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாடு முழுவதும் சுற்றுலாத்துறை முடக்கத்தால் 4 முதல் 5 கோடி பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதால், 1.5 கோடி தொழிலாளர்கள் வேலையற்று இருக்கின்றனர். இதுபோல் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் வட மாநிலங்களில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதனால் அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர். எனவே, அவர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். அண்டை மாநில அரசுகள் செய்தது போல, அரசு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'டாஸ்மாக்கை திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல்' - டிடிவி தினகரன் கண்டனம்