இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா தொற்று காரணமாக இந்தியாவும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியிருக்கிறது. 59 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்தனர். 156 நாள்களாக பொது ஊரடங்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதியும், தேசிய அளவில் முதன்மை நிலையில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வை செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்களும், பெற்றோர்களும் தயாராக இல்லை.
இந்தியா முழுவதும் நீட் தேர்வில் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 13 விழுக்காடு குறைவாகும். இதற்கு காரணம் நீட் தேர்வுகள் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுவதால் மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் பயிலுகிற தமிழ்நாடு மாணவர்களால் வெற்றி பெறமுடியாமல் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
கரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலின் அடிப்படையில், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை உடனடியாக தள்ளிவைக்க வேண்டும். இதற்கு மாற்றாக மருத்துவ, பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கையை முடிவு செய்ய வேண்டுமென்று மத்திய பாஜக அரசை கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.